top of page

என் முன் இருக்கிறது சுட்டுவிரல் நுனியில் நிலவுடன் - வைகறை


தனித்துவமான அழகியல் பார்வைகளால் ஹைக்கூ பயணிகள் நம்மை ஒரு மனோரஞ்சிதப் பூவாக மாற்றிவிடுகின்றனர். நிலவைச் சுட்டும்பொழுது மற்றொரு விரல் நம்மைச் சுட்டி நமக்கும் நிலவுக்குமான ஒரு ஒற்றையடிப்பாதையாக அமைகின்றது. அந்தச் சுட்டுவிரலின் நுனியில் நிலவே இருக்கையில் உள்ளார்ந்த துயரங்கள் சட்டென்று எங்கோ மறையத் துவங்குகின்றன.


தொழில்நுட்பத்தால் விரல்நுனியில் உலகம் வந்துவிட்டபிறகு, ஒரு கோணத்தின் பொருட்டு என்றாலும் கூட அவ்விரலில் நிலா இருக்கும்போது புத்தம் புதிய ஒன்றாக உள்ளம் உருமாற்றமடைகின்றது.

குழந்தைகள் விளையாடுவதைக் கண்டிருப்போம். கரங்களை உயர்த்திப்பிடித்து அப்பொருட்களை மறைய வைப்பார்கள். இரு விரல்களால் தாஜ்மகாலைப் பிடித்திருப்பதைப் போன்ற புகைப்படங்கள் மீது நமக்கு இன்னும் பிடித்தம் அதிகம் இருக்கின்றது. மேலும் அந்திச் சூரியனைக் கூடையில் சுமப்பது போன்ற பலவிதமான பதிவுகளில் நாம் களித்திருக்கின்றோம்.


“மேட்டு நிலத்தில் சைக்கிள் பழகுபவனின் பின்னிருக்கையில் சூரியன்”

என்னும் வைகறையுடைய மற்றொரு ஹைக்கூவும் காட்சித் தளத்தில் திகழ்வதாகும். ஹைக்கூத்தன்மை உள்ள காட்சியில் ஏன் இத்துணை விருப்பம் இருக்கிறதென்று நினைத்துப்பார்த்தால் அதன் தெளிவான சுட்டல் ஒருபுறமும், ஞானமும் குழந்தைமையும் இணைந்த கண்டடைதல் மறுபுறமாகவும் நம்மை வசீகரிக்கின்றன.


இவ்வகையான ஹைக்கூக்களில் மிகக் குறிப்பிடத்தக்க மற்றுமொன்று கோணம். காலமும் அதில் அடக்கம். தற்பொழுது என்ற நிலையிலிருந்து கோணத்தின் வாயிலாகப் புதிதாக ஒன்றினைத் தரிசிப்பது. அத்தரிசனம் உள்ளபடியே உற்சாகம் தரக்கூடிய ஒன்றாக அமைந்திருப்பதனால் இந்நோக்கு தொடர்கின்றது. செயலை முன்வைக்கும்பொழுது கூடுதல் நெருக்கமாக உணர முடிகின்றது. ஹைக்கூ காட்சிப்பூர்வமானதுதான். உள்ளுறை உவமம் போன்று அதன் உட்கூறானது ஒரு உணர்பொருளாகவும் இறைச்சியாகப் பல உள்ளடுக்கு விரிதல்களாகவும் இருக்கின்றன.


சொற்களில் அடங்காத ஒரு மகிழ்ச்சியை, உதடுகள் மட்டுமே உணர்ந்த ஒரு புன்னகையை ஹைக்கூக்கள் பரிசளிக்கின்றன. அதுவே அக்குறிப்பிட்ட காட்சியோடு மட்டுமின்றி, ஹைக்கூத் தன்மையோடு நாம் பரிமாறிக்கொள்கின்ற தகவல்களாகவும் விளங்குகின்றன. சிறியவற்றிலிருந்து மிகப்பெரியவற்றிற்கு என்ற அடிப்படையில் ஹைக்கூவின் தொழில்நுட்பம் குறித்து உரையாடல் வருகையில் இத்தன்மையைப் பகிர்ந்துகொள்வதுண்டு. இவ்விடம் ஹைக்கூவின் தொழில்நுட்பம் என்பதற்கு “ஹைக்கூவின் இயங்குவெளிப் பாங்கு” எனக் கொள்க.


பல்வண்ணக் காட்சிக் கருவியை (kaleidoscope) உணர்வுச் சிதறலின் தளத்தில் வைத்துக் காணும்பொழுது நமது அறிதலானது கூடுதலாக விரிவடைகின்றது. தோற்றமும் தோற்றப்போலியும், நம் கற்பிதம், அகத்தின் இயல்பான மகிழ்வு ஆகியன சந்திக்கும் புள்ளிகளைக் கவனித்து, ஒரு கட்டத்தில் அவற்றையும் சற்றே இடம்மாற்றி வைத்துக் காண்கையில் ஆங்கே அசைந்து, ஒளிர்ந்து, ஒளிந்து, மிளிர்வது நாமாகவும் இருக்கக் கூடுகின்றது.


அத்தனை பிரதிகளிலிருந்தும் நம் கவனம் ஒற்றைத் துகளில் நிகழக்கூடும். அவ்வாறு நிகழ்கையில் நமது மனத்திட்பம் சார்ந்ததாக அது உணரப்படும். புகைப்படங்களை ஒத்திருக்கின்ற காட்சிப்பூர்வமான ஹைக்கூக்களும் அப்படித்தான். எளிய ஒன்றிலிருந்து புரிதல் வழியாக நம்மை மேலும் சிறிது தூரம் நகர்த்திச் செல்லும். காட்சி வடிவிலான உள்ளுணர்வுத் தூண்டல் அத்துணை நுட்பமானது. க.ராஜகுமாரன் அவர்களின் ஹைக்கூ ஒன்றினை அண்மையில் வாசித்தேன்.


“செடியிடையே மறையும் வண்ணத்துப்பூச்சி அசைகின்றன இலைகள்”


வண்ணத்துப்பூச்சி பிரியமானது. அதன் அருகாமைக்கு மனம் எப்போதுமே ஏங்கித் தவித்திருக்கும். கண்ணில் அகப்பட்ட சில கணங்களிலேயே அஃ து மறைந்தும்விடுகின்றது. பார்வையும் காட்சியும் நிலைத்திருக்க, சில இலைகள் மட்டுமே அசைகின்றன. மீண்டும் வண்ணத்துப்பூச்சியின் வருகை நிகழலாம், நிகழாமல் போகலாம். எவ்வாறாயினும் அதன்மேல் உள்ள பற்று ஒரு துளியும் குறையப்போவதில்லை.


வண்ணத்துப்பூச்சி வெளிவருவதைக் காண கண்ணிமைக்காமல் காத்திருக்கின்ற மனம், இலைகள் அசைவதனை உணர்கின்றது. கவனக் குவிதல் முழுவதிலும் வண்ணத்துப்பூச்சியின் மீதிருக்க இலைகளின் அசைவை, அவை கண்ணுக்குப் பக்கத்தில் இருந்தாலும் காண இயலாமல் உணர மட்டுமே முடின்றது. அதுவும் வண்ணத்துப்பூச்சி வெளிவருவதற்கான குறிப்புகளாக இருக்குமென்ற மனதின் அவாவுநிலையினால் நிகழ்கின்றது.


அகத்தீவிரம் உரைக்கின்ற இந்த ஹைக்கூவில் வண்ணத்துப்பூச்சியின் இடத்தில் மனம் விரும்பும் எதனையும், யாரையும் வைத்துக் காணும்பொழுது, மொத்த வாழ்க்கையின் காத்திருத்தலுக்குமான அற்புத ஹைக்கூவாக உருமாற்றம் அடைகின்றது. பின்நவீனத்துவக் கூறு ஹைக்கூவில் மிக நேரடியாகப் பயின்று வருவதில்லையாயினும் மனம் உணரும் படிமச்சுவடுகளை பொருட்படுத்திக் கொள்ளும்பொழுது தன்னியல்பாகவே அஃது நிகழ்கின்றது.


வைகறையின் இழப்பு, அவரை அதிகம் நினைக்க வைத்திருக்கின்றது. அவ்வளவு அன்பையும் உரையாடுவதற்கான நேரத்தையும் அவர் வழங்கினார். பாஷோ இதழின் முதல் விமர்சனத்தைத் தன்னுடைய இணையதளத்தில் எழுதினார். பலருக்காக அவர் ஒருவரே இயங்கினார். மிக நிதானமாகவும் தீர்க்கமாகவும் இருந்த அவரின் இலக்கியச் செயல்பாடுகள் என்னை வெகுவாகக் கவனம் கொள்ளச் செய்தன.


வைகறை அவர்களின் குரலில் இருந்த தழுதழுப்பின் உண்மை என்னை மிகவும் கவர்ந்தது . நன்றாக நினைவிருக்கின்றது, ஒரு முறை அவரைப் பார்ப்பதற்காகவே பொள்ளாச்சி இலக்கிய வட்டத்திற்குச் சென்றிருந்தேன். என்றும் மறக்கவே முடியாத நாள் அது. ஹைக்கூவும் புதுக்கவிதையும் இருந்த அவரின் நூலினை எனக்குப் பரிசளித்தார்.


“தண்ணீரை வரைய முற்படுகிறேன் எவ்வளவு விசித்திரமாகயிருக்கிறது எவ்வளவு சிக்கலாக இருக்கிறது”

என்ற ஜப்பானிய ஹைக்கூ தருகின்ற சித்திரத்தைப் போன்று அவரின் இழப்பை அவ்வளவு எளிதாக உணர்த்திட இயலவில்லை. உணராமலும் இருக்க இயலவில்லை.

~ கவின்

bottom of page