அன்புத்தோழி ஜெயஸ்ரீ அவர்களின் கவிதைத் தொகுப்பு. கவிஞர் வைரமுத்து மற்றும் கவிஞர் க.அம்சப்ரியா ஆகியோரின் அணிந்துரைகளுடன். “இடைவெளியில் விழாது / கொஞ்சிக் களிக்கும் / தென்னங்கீற்றுப் பறவை”- போன்ற கவிதைகள் இத்தொகுப்பில் நம்மை வசீகரிக்கின்றன.

 

ஆழ் மனத்தேடலின் அழகிய சொல்வசியம் மிக்க ஒரு கவிஞராக அவரை நான் பார்க்கிறேன். உணர்வுகள் நெய்த எழுத்துக்களால் காதலின் வலியைக் கலை செய்யும் நேர்த்தி கைகூடியிருப்பதை இத்தொகுப்பின் பல வரிகள் செப்புகின்றன. அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் அறியப்படும் 'அன்புத்தோழி' ஜெயஸ்ரீ நல்ல கவிஞராகவும் அறியப்பட இத்தொகுப்பு உதவும் என்று நம்புகிறேன் அவர் கவிதைப் பயணம் தொடர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்.

 

வைரமுத்து

அணிந்துரையிலிருந்து..

 

அன்புத்தோழி ஜெயஸ்ரீ அவர்களின் கவிதைகளை உள்வாங்கி நிதானிக்கையில், பல குறுங்கவிதைகள், கவிதையென்கிற வெளிப்பாட்டின் வரிகளோ, கட்டமைப்போ எதுவுமில்லாமலே நம் மனதிற்குள் அமர்கிறது. அது  பிரிவின் நிலை, கவிதைகளால் மட்டுமே  உணர்த்தக்கூடியது. எத்தனை சொற்களாலும் நிரப்ப முடியாத பள்ளமாகவும் ,மனதில் எத்தனை புதிய நிகழ்வுகளைத் திணித்தாலும் பிரிவினால்  ஏற்படுகிற  தளும்பல்கள்  எப்போதும்  தீர்வதேயில்லை. அதற்கான ஒரு கவிதையைத் தொடர் வண்டி ஒன்றின் படிமத்தால் எளிதாக மனதில்  பதியவைக்கிறார்.

 

       வாழ்க்கை ஞானிகளாலும் தத்துவப் பெருமக்களாலும், ஆளுமைகளாலும் திரும்பத்திரும்ப ஆய்வுக்குட்பட்டு, முடிவற்ற கருத்து உண்மைகளால்  பயணிக்கிற சொல். வாழ்க்கை குறித்து "சோறு" என்ற பதத்தால் பதிய வைக்கிற சிறந்த கவிதை இத்தொகுப்பில் இருக்கிறது. "சும்மா" என்கிற  சொல் ஆழமாக ஊடுருவிச் செல்கிறது. சிலரின் வாழ்வே கவிதைதான். துயரங்களை இனிப்பாக்குவதும் இனிப்பைக் கசப்பாக்குவதும், இனிப்பும் கசப்புமாக அமையும் வாழ்வின் பேரழகையும் கவிதையாக்குவது இக்கவிஞரின் பெருஞ்சிறப்பு. வேப்பமரத்தின் வாழ்வை இந்தக் கவிதை வனத்திற்குள் கண்டறியலாம்.

                                                    

    கவிதைக்குள் ஒரே ஒரு சொல் போதுமானது. கூடுதலாக இன்னும் கூற வேண்டியதும், உணர்த்த வேண்டியதும் ஏராளமாக இருக்கிறதென்பதை "சுடுசோளம்" என்கிற மையச் சொல்லில், நாம் எதை விசாரிக்கலாம்? எதை விசாரிக்கக்கூடாது என்றும் தெளிய வைக்கிறது. கவிதை வாழ்வைத்  தெளிய வைக்கும். புரியாத புதிர்களை விடுவிக்கும். பழகிய பாதையிலேயே இதுவரை பார்க்காத காட்சிகள் இருக்கிறதென்பதை உணர்த்தும். அப்படியான கவிதைகளைத்தான்  இத்தொகுப்பிற்குள் பல இடங்களில் உணர வாய்ப்பாகிறது.

 

  இவரின் கவிதைகளில் பெருக்கெடுத்தோடும் அன்பும், பிரியமும் கவிதைகளை மேலும்மேலும் மெருகேற்றுகின்றன. சில கவிதைகள் வியப்பின் எல்லைக்கு அழைத்துச் செல்கின்றன. நமக்கும் இப்படியான பிரியத்திற்குரிய காலமொன்று அமைந்த திருக்கிறதாவென்ற  வினாவை எழுப்புகிறது. கவிதையென்பது, கிடைக்காத ஒன்றின் மீதான பிரியத்தை மேலும் யாராலோ அடையாளப்படுத்திய பிறகு,  அதற்கான இழப்பையெண்ணி, அங்கு வைப்பதும், தன்னிடமிருந்த பிரியமான காலத்தையெண்ணி பூரிப்படைவதும்தான். கவிதைதான் கிளறுகிறது. புரட்டிப் பார்க்கிறது. சமாதானமாகிறது. தொகுப்பு முழுக்க இவ்வாறே சிறந்த கவிதைகள் பரவியிருக்கின்றன.

 

க.அம்சப்ரியா

அணிந்துரையிலிருந்து..,.

இடை -வெளியில் உடையும் பூ (IDAI-VELIYIL UDAIYUM POO)

SKU: TH008
₹150.00 Regular Price
₹140.00Sale Price
 • Author: ANBUTHOZHI JEYASREE
  Genre: Poetry
  Publishing House: Idaiyan Idaichi Noolagam
  No. Of Pages: 112
  Language: Tamil

  Production  : 0ffset Printing / Perfect Soft Binding / 300 GSM Wrapper Cover/ 80 GSM Maplitho Inner Papers / Eco Friendly & Recyclable Product/ No Pins used.